Thamizhnilam.com - தமிழ்நிலம்.காம்
தனித்தமிழ் நூற்றாண்டில் செய்யவேண்டுவன!

மாகுன்றன்

     இனத்தின் முதல் அடையாளம் மொழி என்பர். உலகில் உள்ள இனங்களெல்லாம் மொழியின் பெயராலேயே அழைக்கப்படுவது இக்கருத்தையே மெய்ப்பிக்கின்றது. உலகில் உள்ள ஒவ்வோர் இனமும் தமக்குத் தேவையான மொழியைத் தாமே உருவாக்கிக் கொண்டுள்ளது. பல்வேறு காலக்கட்டத்தைக் கடந்துவந்த மொழிக ளெல்லாம் அந்தந்தச் சூழலுக்குத் தகுந்தாற்போல் தேவைகருதி சொற்களை உருவாக்கிக் கொண்டுள்ளன.

     இப்போது மொழியியலில் உருவாகியுள்ள மொழிவழித் தொல்லியல் (Lingustic Archeology)) என்ற துறைவழியாக ஒரு மொழியின் சொற்களைக் கொண்டே அவ்வினமக்களின் தொல் வரலாற்றைத் தோண்டியெடுக்க முடியும் எனக் கூறுகின்றனர். ஒரு மொழி தோன்றிய காலம்முதல் அது வாழ்ந்து வரும் இக்காலம் வரை அம் மக்களின் வரலாறு, வாழ்முறை, பண்பாட்டுக் கூறுகள், பயன்படுத்திய கருவிகள் அனைத்தையும் தோண்டிக் கண்டுபிடிப்பதே மொழிவழித் தொல்லியல் துறையின் பணியாகும்.

     இம் மொழிவழித் தொல்லியல் துறையில், மொழியறிஞரும் மொழிஞாயிறு எனப் போற்றப்படுபவருமான தேவநேயப் பாவாணர் அவர்களே மொழிவழித் தொல்லியல் செயற்பாடுகளைப் பொருத்தி ஆராய்ந்தும் அதன்வழி பல செய்திகளையும் வெளி யிட்டார். இந்த ஆய்வுகளுக்கெல்லாம் தேவையான செய்தி களையும் தொன்மையையும் கொண்ட மிகவும் வாய்ப்பான மொழியாகத் தமிழ்மொழியே இருந்தது. இந்த ஆய்வு இப்போது பெரிய துறையாக வளர்ந்துள்ளது. இதற்கு முன்னோடி தேவநேயப் பாவாணரே ஆவார்.

     ஒரு மொழி தாள், நூல் போன்ற எழுத்துவழிப் பதிவுகளில் மட்டும் வாழ்ந்து விடுவதில்லை. அதைக் கற்போராலும் பயன்படுத்தும் மக்களாலுமே அம்மொழி வாழ்கிறது. இலக்கண, இலக்கியங்கள், நூல்கள் ஒருபுறம் உருவாகியிருந்தாலும் ஒரு மொழி வாழ்கிறது, வளர்கிறது என்று கூறிவிடமுடியாது. அதனாலேயே வடமொழி எனக் கூறப்படுகிற சமற்கிருதத்தில் பல நூல்கள் இருந்தபோதிலும் அது வாழ்மொழியாக இருக்கவில்லை.

     தமிழ் தொன்மையான மொழி. தோன்றியதிலிருந்து பல காலக்கட்டங்களைக் கடந்து வந்துள்ளது. கற்காலம். வேட்டைக் காலம், மாழைக்காலம், வேளாண்மைக் காலம், நாகரிகக்காலம் என மாந்த வரலாற்று அறிஞர்கள் வகைப்படுத்திய காலங்களைத் தமிழ் மொழி கடந்து வந்திருக்கிறது. அக்காலங்களில் மக்களின் வாழ்முறை பண்பாட்டு கூறுக்குத்தகச் சொற்கள் உருவாகி, தமிழ் வளர்ச்சிபெற்று வந்துள்ளது.

     தேவநேயப்பாவாணர் ஒவ்வொரு சொல்லையும் எடுத்துக் கொண்டு அவை எந்தக் காலத்தில் தோன்றியிருக்கலாம் என்று வரையறை செய்வதன்வழி, மொழிவழி அகழ்வாய்வுக் கருத்தை முன்வைத்தார்.

     எனவே, ஒரு மொழி ஓர் இனத்தின் வெறும் அடையாளம் மட்டுமன்று. ஓர் இனத்தின் முகவரியையும், வரலாறு மற்றும் பண்பாட்டுப் பதிவையும் அடக்கிய பெட்டகமுமாகும்.

     மொழியை மக்கள் பயன்படுத்தும் வகையிலேயே அது வளர்கிறது. மக்கள் குழுக்களாகப் பிரிந்து குழுத்தலைமை, கூட்டத் தலைமை, நாடு எனப் பல நாகரிக படிமலர்ச்சி வளர்ச்சிப்போக்கில் மொழிக்கு அதிகாரம் தேவைப்பட்டது. மன்னர் காலத்தில் ஆளும்முறை, பதிவு பயன்படுத்தம் என்ற வகையில் ஒரு மொழியை ஆட்சி மொழியாகப் பயன்படுத்திக் கொண்டனர்.

     ஆட்சிமொழியை அத்தோடு மட்டும் விடாமல் அதன் இலக்கிய வளர்ச்சி, அம்மொழியில் வெளிவரும் நூல்கள் வழி அறிவு வளர்ச்சி ஆக அத்துணைத் துறைக்கும் ஆக்கமும் ஊக்கமும் அளித்தனர். அம்மொழியில் மக்களுக்குக் கல்வி அறிவூட்டினர். இந்த வகையிலேயே தமிழ் மொழி வளர்ச்சி பெற்று வந்துள்ளது. ஒவ்வொரு தமிழ் மன்னர் ஆட்சியிலும் வளத்துடன் வளர்க்கப் பட்டது. புலவர்கள், அறிஞர்கள் தங்கள் பொருள் நிலை, ஏற்றத் தாழ்வுகளைக் கடந்து தமிழ்மொழிக்கு நல்லாக்கங்களை நல்கியுள்ளனர். இவற்றை ஒருங்கிணைத்துத் திரட்ட தமிழ் முக்கழகங்கள் போன்ற அமைப்புகள் உருவாக்கப்பட்டிருந்தன. அறிவு ஆக்கங்கள் மதிக்கப்பட்டதன்வழி மருத்துவம், சிற்பச் செந்நூல் எனக் கட்டிடக்கலை தொழில்நுட்ப நூல்கள் உருவாயின. பிற்காலத்தில் அரிய நூல்கள் பல திட்டமிட்டு அழிக்கப்பட்டபோதிலும், தமிழ் ஆட்சி மொழியாக அதிகாரம் குறைக்கப்படாதிருந்தது.

     ஆரியர் வருகையாலும், ஆரிய வல்லாண்மையாலும், வடமொழித் தாக்கத்தாலும் தமிழ்மொழி பெரிதும் தாக்கமுற்றது. ஆரியர்கள் தம்வேதக் கருத்துகளைத் தமிழ் மக்களிடம் வலிந்து புகுத்தலாயினர். தமிழ் மன்னர்களைப் பல்வேறு வகைகளில் திசைத்திருப்பி தங்களுடைய இருப்புகளையும், ஏந்துகளையும் இந்நாட்டில் தக்கவைத்துக் கொண்டனர். மெல்ல மெல்ல இந்நாட்டில் நிலவிய நானிலத் தெய்வ வழிபாடுகளைப் புறக்கணிக்குமாறு செய்தனர். தமிழர் மதங்களான (சிவனிய, மாலிய) மதங்களில் தங்கள் வேதக் கருத்துகளைப் புகுத்தலாயினர். முத்தெய்வ வழிபாட்டை நுழைத்தனர். சமற்கிருதச் சொலவங்களையும் புரியாத மந்திரங்களையும் பாடல்களையும் மக்களிடைப் பழக்கப்படுத்தினர்.

     இறை நம்பிக்கை என்ற பெயரில் தங்கள் மொழி, பண்பாடு, நாகரிகத்தை இந்த மக்களிடை, மண்ணிடையில் நுழைத்து அதன்வழி தங்கள் வாழ்வு அடிப்படையை வலுவாக அமைத்து கொண்டனர்.

     முதலில் ஆரிய எதிர்ப்பைத் தொடங்கியவர்கள், சிவனிய சமயக் குரவர்களான நால்வரே. ஆரிய மந்திரங்களை எதிர்த்து அருமையான இன்னிசைப் பாடல்களான தேவாரம், திருவாசகத்தை இந்நாடு முழுவதும் வலம்வந்து பரப்பினர். அண்மைக் காலத்தில் இந்தித் திரைப்பாடல்களே தமிழ்நாட்டில் முணுமுணுத்துக் கொண்டிருந்த போது, தமிழ் இசையமைப்பாளர் ஒருவரின் திரையிசைத் தாக்கத்தால் தமிழ்ப் பாடல்களுக்குத் தமிழ்மக்கள் திசைமாறி வந்தனரே அதுபோல்தான் தமிழ்நாடு முழுவதும் வலம்வந்த அவர்கள், தமிழ்நாட்டின் ஒவ்வொரு திருத்தளங்களுக்கும் சென்று அவற்றின் சிறப்பைப் பற்றி பாடி, தமிழர்களுக்குத் தங்கள் இடத்தின்மீதான பற்றை உருவாக்கினர்.

     தில்லையம்பதியைப் பற்றியும் ‘தோடுடையுடைய செவியன்’ எனத் தொடங்கும் பாடல்வழி சீர்காழி பற்றியும், இதேபோல் இம்மண் தளங்களைப் பாடினமாத்திரத்தில் அதைச் சுற்றியுள்ள பகுதி முழுவதும் உள்ள மக்கள் அப்பாடலில் ஈடுபாடு கொள்வதும் அதன்வழி இம்மண்ணின்மீது பற்று உண்டாவதும், மொழிபுரியாத பாடல்களில் அயன்மையும் உருவானது. இவ்வாறு தமிழினத்தை இம்மண்ணிற்குரிய தமிழ்ச்சமயங்களின்மீது பற்று ஏற்படச் செய்தனர்.

     வந்தேறி ஆரியர்களுக்கு இவர்கள்தாம் பெருமளவில் முதன்மை எதிரியாயினர். பன்னிரு திருமுறைதான் எதிர்க்கும் மூலப்பொருள் ஆனது. அவற்றைக் கோவில்களிலேயே வைத்து பூட்டி, மக்களிடம் பரவாது தடுத்தனர்.

     பிற்காலச் சோழனான இராசராசன் ஆரியர்களுக்கு நல் அடிமையாகக் கிடைத்தான். சமற்கிருதத்திற்கு ஆக்கங்கள் செய்து கொடுத்தான். அவர்களுக்காக அறச்சாலைகள் கட்டுவித்தான். நிலங்களை ஒதுக்கினான். பிற்காலத்தில் அவனுக்கு ஏதோ ஒரு விழிப்புணர்வு தோன்றி பன்னிரு திருமுறைகளை அவர்களிடமிருந்து மீட்டெடுத்துக் கொடுத்தான். தேவாரம், திருவாசகம் ஓதுவதற்கு முனைப்பாக ஏற்பாடு செய்தான். அவன் அன்றைக்கு அவற்றை மீட்கவில்லையானால் அன்றைக்கே அவை அழிக்கப்பட்டிருக்கும். அவனின் அச்செயற்பாடும் ஆரிய எதிர்ப்புக்கு பெருமளவில் உதவியது.

     அவனுக்குப் பிறகு இராசேந்திரன் தம் தந்தை வழியிலேயே கங்கை கடாரம்வரை சென்று அங்காங்கு சிவனியக் கோவில்களைக் கட்டித் தேவாரம் திருவாசகம் வழி இறை வழிபாடு நடக்குமாறு நிறுவினான். இன்றைக்கும் கீழ்நாடுகளில் பலவற்றிலும் தமிழில் தேவார வழிபாடு நடப்பதற்கு அதுவே அடிப்படையாகும். எனினும் அதன்பிறகு சோழ ஆட்சி வீழ்ந்தது.

     மதுரை பாண்டியர் ஆட்சியிலும் ஒற்றுமையின்மையால் இசுலாமியர் புகுந்தனர். அதை மீட்க அழைக்கப்பட்ட விசயநகரப் பேரரசு, இசுலாமியர்களிடமிருந்து மதுரையை மீட்டது. ஆனால், தமிழ்நாடு முழுமையையும் தன் ஆட்சிக்குள் கொண்டு வந்தது. சட்டிக்குத் தப்பி நெருப்பில் வீழ்ந்ததுபோல் விசயநகரப் பேரரசிடம் தமிழ்நாடே அடிமைப்படுத்தப்பட்டது. தமிழ்நாடு 600 பாளையப் பட்டுகளாகப் பிரிக்கப்பட்டு, தமிழ்நாடு முழுதிலும் பாளையக் காரர்களின் ஆட்சிதான் நடந்தது. மூவரசர், மூன்று நாடு, முக்கழகம், முத்தமிழ் அனைத்தும் போயின.

     இசுலாமியர், தெலுங்கர், மராட்டியர் இன்னும் யார்யாரோ தமிழ்நாட்டை ஆண்டு மேய்ந்துத் தள்ளினர். ஆங்கிலேயன் கைப்பற்றினபோதும், ஆங்கிலர்க்கு நேரடியாகத் தமிழர் அடிமைப்பட வில்லை. நம்மை ஏற்கனவே அடிமைப்படுத்திக் கொண்டிருந்த அண்டை ஆண்டையர்கள் விசயநகரப்பேரரசு போன்றவர்களிடம் கப்பம் கட்டுவதை மாற்றி ஆங்கிலேயரிடம் கப்பம் கட்டினர். கப்பம் கட்டுமிடம் மட்டுமே இடம் மட்டுமே மாறியது. நாம் எங்கு யாரிடம் அடிமைப் பட்டிருந்தோமோ அதுவே தொடர்ந்தது. ஆங்கிலேயர் சென்றபின்னும்கூட மாற்றம் ஏதும் பெரிதாக நடந்துவிடவில்லை.

     விசயநகரப் பேரரசின் ஆட்சியில் ஒரே வீச்சில் தமிழ்நாடே, தமிழினமே அலைக்கழிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் உள்ள சிறிய பெரிய நிலவுடைமையாளர்கள் அனைவரும் நிலமிழந்து போயினர். சிறு நிலவுரிமையாளர்கள் கூலிகளாக்கப்பட்டனர். பெரு நிலவுடைமையாளர்கள் கையிலெடுக்க முடிந்த சொத்துகளை எடுத்துக்கொண்டு குடும்பத்துடன் தமிழ்நாட்டிலிருந்து எங்கெங்கோ வெளியேறினர். இன்றைக்குத் தமிழீழத்திலிருந்து தமிழர்கள் உலகெங்கும் சிதறியோடுவதுபோல் முன்பொரு காலத்தில் உலகெங்கும் அவ்வாறு சிதறி ஓடிய இனந்தான் தமிழினம்.

     ஓடவும் முடியாது நலிந்துபோன எஞ்சிய தமிழினமே தமிழ்நாட்டில் மிஞ்சிய கூலிகளாகவும் பாழைகளாகவும் தங்கிப்போயினர். அன்று ஒடுங்கிப்போன தமிழினம் இன்றுவரை ஒடுக்கப்பட்டே உள்ளது.

     ஆங்கிலருக்கு நேரடியாக அடிமைப்பட்டவர்கள் தமிழர்களே அல்லர். நமக்கு மேலிருந்த வந்தேறி இனங்களான தெலுங்கர், மராட்டியர், இசுலாமியர் ஆகியோருக்கும் அதற்கு முன்னரே வந்த ஆரியருக்கும்தான் நாம் அடிமைப்பட்டிருந்தோம். அவர்கள் ஆங்கிலேயர்களுக்குக் கப்பம் கட்டுபவர்களாக இருந்தனர். இப்போது கிடைத்த இந்திய விடுதலையும் அவர்களுக்குத்தானே ஒழிய தமிழினத்திற்கு அன்று.

     அவர்கள்தாம் ஆங்கிலேயரிடமிருந்து விடுதலை பெறுவதற்கான போராட்டத்தில் குதித்தனர். விசயநகரப் பேரரசு அமர்த்திய பாளையக்காரர்களில் தெற்கே சில தமிழப் பாளையக்காரர்களும் இருந்தனர். அவர்களில் ஒரு சிலர்தாம் ஆங்கிலரை எதிர்த்துப் போராடினர். மருதுபாண்டியர், வேலுநாச்சியார் ஆகியோரும் இந்த வரிசையில் பிற்காலத்தில் வந்த வ.உ.சிதம்பரனார், திருப்பூர் குமரன் இவர்களெல்லாம் தமிழர்களாக இருந்து ஆங்கிலரை எதிர்த்தவர்கள்.

     ஏற்கெனவே கூறியதுபோல் தமிழினம் நேரடியாக ஆங்கிலர்க்கு அடிமையாக இருந்ததில்லை. அதேபோல் ஆரியர்களும் நம்மை என்றுமே ஆட்சி செய்ததில்லை. நம்மை ஆண்ட அரசர்களை வயப்படுத்திக்கொண்டு தங்களின் கருத்தைச் செயற்படுத்திக் கொண்டிருந்தனர். தங்கள் செயற்கை மொழியைத் தமிழுடன் கலந்து வாழவைத்துக் கொண்டிருந்தார்கள். மக்களை நான்கு குலமாகப் வேறுபடுத்திப் பிரித்துத் தங்களை உயர்குலமாகக் காட்டிக்கொண்டு உயர் வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தார்கள். இதெல்லாம் அவர்கள் இந்த இனத்தை ஆளுவதற்கு மறைமுகமாகச் செய்த சூழ்வினைகள். ஆனால், தமிழினத்தை அடிமைப்படுத்தி, தமிழ்நாட்டை நேரடியாக ஆண்டவர்கள் இசுலாமியர், தெலுங்கர்கள், மராட்டியர்கள், களப்பிரர்கள் இவர்கள் போன்றோரே.

     ஆங்கிலேயேர் வந்தபோதும் தமிழினத்தைப் பிழிந்து கப்பம் கட்டியவர்கள் அவர்களே. நேரடியாக நாம் பிழியப்படவே இல்லை. கட்டபொம்மு (வீரபாண்டியக் கட்டபொம்மன்) கப்பம் கட்ட மறுத்தான் என்றால் விசயநகரப் பேரரசுக்குக் கட்டவேண்டிய பணத்தை ஆங்கிலேயனுக்குக் கட்டமறுத்தான். அவன் தமிழ் அரசனுமல்லன். விசயநகரப் பேரரசு அமர்த்திய பாளையக்காரர்களில் ஒருவன். ஒரு தமிழனை வைத்து ‘வீரபாண்டியன்’ என்ற தமிழ் மன்னனின் பெயரைச் சேர்த்து ஒரு ‘கட்டபொம்மு’ என்ற தெலுங்குப் பாளையக்காரன் கதையைத் திரைப்படமாக்கிப் புகழ் பரப்பிவிட்டவர் ‘பந்தலு’. இதற்குக் கதையாக்கம் ம.பொ.சி. என்ற தமிழர். ‘எம்குலப் பெண்களுக்கு மஞ்சள் அரைத்துக் கொடுத்தாயா?’ என்ற உரையாடலைக்கேட்டு உணர்வு வயப்பட்டு எழுச்சி பெற்றார்கள் எம் தமிழர் அனைவரும். ‘எம்குலப்பெண்கள்’ என்றதும் ‘தமிழ்க்குலம்’ என்று தவறாக எண்ணிக்கொண்டு, அவர்களாகவே புளகாங்கிதம் அடைந்துபோனால் அதற்கு அவர்கள் பொறுப்பல்லர்.

     என்றைக்கு விசய நகரப் பேரரசு தமிழ்நாட்டில் காலூன்றியதோ அப்போதே தமிழினம், நாட்டால், இனத்தால், மொழியால், பண்பாட்டால், அதிகாரத்தால் சீரழிந்துபோனது. வரலாறும் அழிக்கப்பட்டது. ஏற்கெனவே ஆரியரால் கல்வி அழிக்கப்பட் டிருந்தது. ஆரியர் வருகைக்குமுன் கல்விமுறை எவ்வாறிருந்தது என்ற வரலாறும் இல்லை. கழகப் பாடல்களில் பெண்பாற் புலவர்கள் இருக்கிறார்கள் என்பதால் பரவலாக மக்களிடம் கல்வி இருந்தது எனத் தெரிகிறது. பிற்காலத்தில் கல்வி முறையில் சிறிது விடுதலை பெற்றது ஆங்கிலேயனால்தான். தமிழ்மொழித் தொன்மை, தமிழிய மொழிக் குடும்பம் என்றெல்லாம் அடையாளம் காட்டியவர் கால்டுவெல்தான்.

     தமிழினம் மீள்வதற்கு ஒரு பற்றுக்கோலாக இருந்தவை, கழக இலக்கியங்களும், அதற்குப்பின் அவ்வப்போது தோன்றிய இலக்கியங்களும்தாம். அவை சமயம் சார்ந்தோ அல்லது எவ்வகையாக இருப்பினும் மொழிக்கும், இனத்திற்கும் அது தேவையாக இருந்தது.

     தமிழினத்தை அடிமைப்படுத்திய கூறுகள் இரண்டு. ஒன்று ஆரியம். அது ஆட்சியாக அல்லாது நெடுங்காலம் சூழ்ச்சியால் அடிமைப்படுத்தியிருந்தது தெளிவு. மற்றொன்று அயலவர் ஆட்சி. அயலவர் என்றால் ஆங்கிலேயர் அல்லர். அவர்கள் நேரடியாக ஆளவில்லை என்பதும் நமக்குத் தெரிந்ததுதான். தமிழரும் அல்லாது தமிழ்நாட்டை அடிமைப்படுத்திக் கொண்டிருக்கும் இந்த அயலவர் களுக்கு என்ன பெயர் கூறலாம் என்று நாம் எண்ணிக் கொண்டிருக்க வேண்டியதில்லை. அவர்களாகவே ‘திராவிடர்’ என ஒரு நல்ல பெயரைத் தேர்ந்தெடுத்துச் சூட்டிக் கொண்டனர். தமிழர்கள் என்று பெயரிட்டுக் கொள்வதில் அவர்களுக்குச் சிறிதும் விருப்பம் இல்லை என்றுதான் தெரிகிறது. கால்டுவெல்தான் இவர்களுக்குத் துணை செய்திருக்கிறார்.

     தொடர்ந்து அயலவர் ஆட்சியால்தான் தமிழ்மொழியும் இனமும் ஆட்சியிழப்பு, அதிகார இழப்பு, கல்வி மொழியிழப்பு, வழக்கினின்று வழுவல், மொழிக்கலப்பு ஆகிய பல வீழ்ச்சிகளைச் சந்தித்தது. தமிழ் இனம் தன் அடையாளங்களில் முகாமையானதான மொழி அடையாளத்தில் பழுதைச் சந்திக்க நேர்ந்தது.

     இதனின்று மீண்டு வருவதற்குரிய வழியை அறிஞர்கள் சிந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. கழக இலக்கியங்கள் மீட்டெடுக்கப் பட்டன. சமய இலக்கியங்கள், சிற்றிலக்கியங்கள் இடையில் தோன்றியவை. இவை ஒருபுறம் தொகுக்கப்பட்டும் தொடர்ந்து ஆக்கங்கள் உருவாகிக் கொண்டுமிருந்தது.

     இந்த அனைத்து இலக்கியங்களையும் கொண்டு தமிழ்மொழி வழியே இனத்தை மீட்கலாம். இனவழியும் மொழியை மீட்கலாம். இரண்டும் ஒன்றையொன்று சார்ந்ததாக இருப்பன. உலகில் இனமீட்புக்கு மொழி பெருந்துணை செய்துள்ளது என்ற பதிவுகள் உள்ளன.

     ஈபுரு மொழி ஏறக்குறைய அழிந்துவிட்ட மொழி. மிகக் குறைந்த எண்ணிக்கையுள்ள முதியவர்கள் சிலரே அறிந்திருந்த அந்த மொழியை, அரசு ஒரு முயற்சியைக் கையிற்கொண்டு, அவர்களை ஒருங்கிணைத்து அந்த மொழியை அரசு மொழியாக்கி அனைத்தையும் அதில் உருவாக்கி அது இன்றைக்கு ஒரு நாட்டின் ஆட்சிமொழி. உலக அனைத்து அறிவியல் தொழில்நுட்பங்கள், செய்திகள் அந்த மக்களுக்கு அந்த ஈபுரு மொழியில் சென்றடைகின்றன. அவர்களின் எண்ணங்கள், ஆக்கங்கள் அம்மொழியிலேயே ஆக்கப்பட்டு உலகிற்கு நல்கப்படுகின்றன. அந்த இனம் ஈபுரு மொழியால் உலகிற்கு அடையாளம் காட்டப்பட்டு வருகிறது.

     இதேபோல் தமிழினத்தை மீட்டெடுக்கும் நோக்கம் கொண்டு கலப்புற்ற தமிழைத் தூய்மைப்படுத்தி, அதில் ஆக்கங்களை உருவாக்கிப் பயன்படுத்தத்திற்குக் கொணர்ந்தால், அது கல்விமொழி, ஆட்சி மொழியென அதிகாரத்தைப் பெற்று விடுமானால் தமிழ் அனைத்து மொழிகளையும்விட வளம் பெற்றிருப்பதால் அது உலக அளவில் விளங்கித் தோன்றும். இதை ஓரளவு கருத்தில் கொண்டு உருவான இயக்கமே தனித்தமிழ் இயக்கம்.

     தனித்தமிழ் இயக்கம் தோன்றிய காலத்தில் அதற்கு பல எதிர்ப்புகள் வந்தன. எந்த ஒரு கருத்திற்கும் அவ்வாறு ஓர் எதிர் கருத்து வருவது இயல்பு. தமிழுக்கு ஆக்கம் செய்பவரிடையேயும் இதற்கு எதிர்ப்புகள் உருவாயின. மொழிக் கலப்பால் மொழி வளரும் என்ற எதிர் கருத்தும் பலரிடை நிலவியிருந்ததும் ஒரு காரணம்.

     தங்கள் சமற்கிருதம் தனியே வளரமுடியாது. அதற்கு ஒரு பெருமக்கள் தொகை தேவை என்று எண்ணிச் செயல்பட்ட ஆரிய ஆற்றல்கள் உருவாக்கிய ஒரே திட்டமே, பிறமொழிகளில் சமற்கிருதத்தைக் கலந்து அதை வளர்ப்பது என்பதுதான். எந்த அளவிற்கு அது பிறமொழிகளில் கலக்கிறதோ அந்த அளவிற்கு அது வளர்ச்சிபெறும்; அது நாளடைவில் அந்த மொழிக்குள்ளேயே பரவி மூலமொழியைச் செல்லரிப்பதுபோல் அரித்து அழித்துவிட்டு சமற்கிருதமே தனித்து வாழும் என்ற நிலையில் சமற்கிருதத்தை நிறுவுவதே ஆரியப் பிராமணர்களின் திட்டம்.

     இந்த முயற்சியில்தான் தமிழ்மொழியில் சமற்கிருதம் மும்முரமாகக் கலக்கப்பட்டது. மணிப்பிரவாளத் தமிழைப் பெரிதும் திட்டமிட்டுப் பரப்பினர். இதற்கு எதிரான போக்கில் இருந்த தனித்தமிழை ஆரியர்கள் கடுமையாக எதிர்த்ததில் வியப்பில்லை. ஆனால், இங்குள்ள தமிழர்களே சிலர் அதைப் புரிந்து கொள்ளாததுதான் வியப்பு. அவர்களும் எதிராக இருந்தார்கள்.

     சமற்கிருதம் புகுந்ததனாலேயே தெலுங்கு, கன்னடம், மலையாளம் இன்னபிற மொழிகள் உருவாயின; பிரிந்துபோயின என்பது மொழியியலாரின் தெள்ளிய முடிவு. அந்த மொழியினரும் தாங்கள் பிரிந்துபோனதை உணராமல் தங்கள் மூலமொழி சமற்கிருதம் என்று எண்ணுபவர் பலரும் இருந்தனர்.

     தமிழ்நாட்டில் வாழும் பிறமொழிக்காரர்களும் தனித்தமிழைக் கடுமையாக எதிர்த்தனர். அவர்களில் மூலமானவர் தமிழ்நாட்டில் திராவிடர் கழகத்தைத் தோற்றுவித்த பெரியார். தமிழ்மொழியை இவர் சாடியதுபோல் உலகில் யாருமே சாடியது இல்லை என்றே கூறலாம்.

     மாந்தவியல்சார் அறிவியல் அறிஞர்கள் ஏற்றுக் கொண்டுள்ள தாய்மொழிக் கருத்தையே பகுத்தறிவு பேசிக்கொண்டிருந்த பெரியார் எதிர்த்தது வியப்பிலும் வியப்பு. தன்மானத்தை வலியுறுத்திய பெரியார், தமிழரின் தன்மானத்திற்கு மூலவேரான தமிழ்மொழி யையே எதிர்த்தது அறிவியலுக்கே புறம்பானது. அவர் திராவிட இனக்கருத்தியலின் தோற்றுநரும் மூலவருமாக இருந்ததால் அவரின் இந்த முரண்பாடான தாய்மொழிக் கருத்தியல் அவரின் பின்பற்றாளர் களால் இன்றுவரை கடைப்பிடிக்கவும் பேசவும்பட்டு வருகிறது. ஆங்கில வல்லாண்மை தமிழ்நாட்டில் நுழைவதற்கு இவர்கள்தாம் ஒரு பெரிய காரணமாக இருந்தனர் என்றால் அது மிகையில்லை.

     திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்த தி.மு.கழகம் இந்தி எதிர்ப்பை முன்னெடுத்தது. தமிழை வளர்க்கவும் பரப்பவுமான பணியை முன்னெடுத்துத் தமிழ் மக்களிடம் செல்வாக்குப் பெற்றது. தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் அளவில் அவர்களின் வளர்ச்சிக்கு இந்தியெதிர்ப்பும், தமிழ் வளர்ச்சிச் செயற்பாடும் மிகத் துணை நின்றன. அதன் தலைவராக இருக்கின்ற கலைஞரின் தனிப்பெரும் முயற்சியால் மட்டுமே இந்திய அரசால் தமிழுக்குச் செம்மொழித் தகுதிக்கு ஏற்பிசைவு கிடைத்தது. ஆனால், தலைமை முதுமை யடைந்துவிட்டது. அதன் அடுத்த தலைமுறைகள் ஒரு துளியேனும் தமிழை ஒரு பொருட்டாக மதிப்பார்களா என்ற ஐயம் தோன்றுகிறவாறு அவர்களின் செயற்பாடுகள் அமைந்துள்ளன. அவர்கள் இறுதியாகப் பொறுப்பு பெற்ற நடுவணரசின் செயற்பாட்டில், எந்த இந்தியை எதிர்த்து ஆட்சிக் கட்டில் ஏறினார்களோ அந்த இந்தியைத் தூக்கிச் சுமந்து தங்களைத் தேர்ந்தெடுத்த மக்களிடமே திணிப்புப் பணி செய்து தங்களை அரசில் தக்கவைத்துக் கொண்டார்கள். தூக்கித் தோளில் சுமந்து கொண்டிருக்கும் வளர்ந்த குழந்தை, தாயையே எட்டி உதைக்கும் கதைதான்.

     விளங்கித் தோன்றும் ஐந்து திராவிட இயக்கங்களுள், தனித்த அடையாளம் கொண்டு,செயற்பாட்டையும் முன்னேற்றத்தையும் வென்ற தி.மு.கழகம், அது தமிழ் மொழிக்கு ஆக்கம் செய்ததன் வழிதான் என்றால் அது மிகையில்லை. தமிழ்நாடு என்று பெயர் சூட்டியது மட்டுமல்லாமல் தாம் நடத்திய உலகத் தமிழ் மாநாட்டில் வெளியிட இருந்த இந்திய அரசு அஞ்சல்தலையில் தமிழ் இடம் பெறவில்லை என்ற காரணத்தால் வெளியிடாமல் அந்நேரத்திலேயே புறக்கணிப்பு செய்த துணிவு, நோக்கம் பிறழாமை இவையெல்லாம் அண்ணாவிடம் இருந்தது பாராட்டுக்குரியவை. அதேபோல் கலைஞரின் செயற்பாடுகள் பலவும் நெஞ்சந்திறந்து பாராட்ட வல்லவை.

     அச்செயற்பாடுகள் தொடரும் என்ற எதிர்பார்ப்பிலேயே பாவலரேறு ஐயாவின் ‘அருட்செல்வர் ஆட்சியை அரணிட்டு காக்க’ என்ற வரிகள் வெளிப்பட்டன. அருட்செல்வர் இன்று தளர்வுக்கு உட்படும்போது அவர் பெற்ற பிறங்கடையினராகிய பொருட் செல்வர்கள் அதை முன்னெடுக்க வாய்ப்புள்ளதா என்றால் வெறுமைதான் தோன்றுகிறது.

     ‘வஞ்சகர் வந்தவர் தமிழால் செழித்தார்; வாழ்வினில் உயர்ந்தபின் தமிழையே பழித்தார்; நம் செயல் ஒழுக்கங்கள் பற்பல அழித்தார். ’ என்ற ஆரியரை நோக்கிப் பாவேந்தர் விடுத்த வரிகளுக்கு இவர்களும் இலக்கணமாகிவிடக் கூடாதே என்ற அச்சம் நம்மிடம் குடிகொள்வதில் என்ன வியப்பு இருக்கிறது.

     இவர்களும் சேர்ந்து தூக்கவேண்டிய ‘தமிழ்த் தேசியம்’ இன்று தனித்து வலுப்பெற்று வருகிறது. இளைஞர் உலகம் இதைக் கையிலெடுத்துக் கொண்டுள்ளது. யாரையும் அக்குவேறு ஆணிவேறாகத் திறனாய்வு செய்யவல்ல நிலைக்குப் பெரியாரும் வேறுபட்டுவிட முடியாது. ஆரியர்க்குமேல் அவர் தமிழுக்கும் செய்த பழிப்பு வெளிப்படாமல் மூடிவைத்துவிட முடியுமா என்ன!

     இதைக் கடுமையாக எதிர்ப்பதில் திராவிட இயக்கங்கள் தங்களிடை ஒற்றுமை கொள்கிறார்கள். இல்லாத திராவிடத்தைக் காத்துக்கொள்ளும் முனைப்பு தமிழைக் காப்பதில் இல்லை. தனித்தமிழ் நூற்றாண்டைக் கொண்டாட எண்ணும் நேரத்தில் ‘நீதிக்கட்சி’க்கு நூற்றாண்டைப் போற்றுகிறார்கள். இவர்கள் அடையாளம் காட்டும் ஒருவர்கூட தமிழ் மண்ணில் பிறந்து நலம்பெற்று தமிழுக்கு ஒரு துளியும் ஆக்கம் செய்தவர்கள் அல்லர். மாறாகத் தமிழுக்கு இரண்டகம் விளைவித்தவர்கள்.

     இவற்றிலிருந்து சற்றே விலகி தி.மு.கழகம் செய்த தமிழ்த் தொண்டால் தமிழும் உயர்ந்தது; தாங்களும் உயர்ந்தார்கள். இஃது ஒன்றே தமிழ்நாட்டின் நீண்டகாலப் பட்டறிவு.

     பாவாணர், பாவேந்தர், பாவலரேறு கூற்றுகளெல்லாம் இதையே கூறுகின்றன. தமிழ்நாட்டில் அரசியல் கட்சியாக இருந்தாலும் சாதிக்கட்சியாக இருந்தாலும் அல்லது எந்த அடையாளத்துடன் அமைப்புகளைத் தோற்றுவித்தாலும் அந்த அமைப்பு தமிழையும் தமிழினத்தையும் உயர்த்தாமல் இலக்கு வெற்றியை அடைய முடியாது. எந்தப் பெரிய அமைப்புகளுக்கும் சாதி அமைப்புகளுக்கும்கூட இந்த வரையறை பொருந்தும்.

     இந்திய ஒருங்கிணைப்பு என்று பசப்புக் காட்டி இந்தியைத் திணித்த இந்திய அரசு ஒரு நிலைக்குமேல் இந்தியை விடுத்து, சமற்கிருதத்தைத் தூக்கி அதைப் பரப்ப முனைப்பு காட்டுகிறது. இதைக் காரணம் காட்டி இங்குத் தமிழ்நாட்டில் மறுபடியும் பெரியாரைத்தான் தூக்க முயல்கிறார்கள். பெரியார் கொள்கை மூடநம்பிக்கையொழிப்பு, பகுத்தறிவு, இறைமறுப்பு இதற்குத்தான் பயன்படுமேயொழிய ஆரிய எதிர்ப்பைத் தாண்டி தமிழ்ப் பாதுகாப்புக்குப் பயன்படாது. தமிழைப் பொறுத்தவரை பார்ப்பனனினும் பெரியாரே மிகவும் இழிவுபடுத்தியவர் என்பதை யாரும் மறுத்துவிடவும் மறைத்து விடவும் முடியாது.

     ஆங்கிலத்தைக் கைக்கொண்டு இந்தியை எதிர்ப்பதுதான் பெரியாரின் திராவிடக் கொள்கை. இந்தி பேட்டை அரம்பன் என்றால் ஆங்கிலம் அனைத்துலக அரம்பன்.

     நம்மாழ்வாரிடம் ஒருமுறை பேசிக்கொண்டிருக்கும்போது, ‘இவ்வளவு பன்னாட்டு விளம்பரங்கள் செய்து வேதிநச்சு கலந்த பொருள்கள் வந்திறங்குகின்றனவே, சிறிய அளவில் இருந்துகொண்டு இதை நாம் எதிர்க்க முடியுமா?’ என்று கேட்டபோது,

     ‘அவற்றைப் பெரிய அளவில் நாம் ஏன் எதிர்க்க வேண்டும். நம் தோட்டத்து வேப்பங்குச்சியில் பல் துலக்கினால் - அது கலந்த பற்பொடியை நாம் பயன்படுத்தினால், இது பரவலாகும்போது, அவன் திரும்பிப்போக வேண்டியதுதான்’ என்று அவர் கூறினார்.

     அதுவேதான் நமக்கும் தீர்வு. நமக்கு இருக்கும் ஒரே கருவி தமிழ்தான். அதன் இப்போதைய வளர்ச்சி சற்றும் போதாது. உலகில் எத்தனை மொழிகள் இருந்தாலும் தமிழின் வளம் ஈடாகாத வகையில் தமிழ்மொழிக்கு வளம் உண்டு.

     நம்மோடு சேர்ந்து அதையும் நலிவடையவிட்டுவிட்டோம். நேற்று தோன்றிய மொழிகளெல்லாம் உயர் தொழில்நுட்பங்களை உள்வாங்கித் தத்தம் மக்களுக்காகப் பணியாற்றுகின்றன.

     அரிய கருவியைத் துருப்பிடிக்க வைத்திருக்கிறோம். உயிரோடு மண்ணில் போட்டு மக்கவைத்துக் கொண்டுள்ளோம். ஒன்றால் ‘தமிழ் வாழ்க’ என்று முழக்கமிட மட்டுமே தெரிந்தவர்களாக இருக்கிறோம். தமிழை வாழ்விக்க உழைக்கச் சோம்பி இருக்கிறோம்.

     தமிழைப்போல் தமிழரும் ஆற்றல் பெற்றவர்கள். விழிக்கத்தான் இல்லை. தமிழர் என்ற பெருமையுணர்வு இல்லை. திராவிட முகமூடி போட்டுக்கொண்டு காற்றில் வாள் வீசுகிறோம். அனைத்துத் துறையிலும் திறன்பெற்று அயலவர்க்கு உழைக்கிறோம். திரும்பிப் பார்த்தால் சொந்த மண்ணுக்கு நம்மைப் பெற்ற சொந்தங்களுக்காக உழைத்தது ஒன்றுமேயில்லை.

     ஒன்றால் தன்னலம்; இல்லையேல் அயலார் நலம் என்று போய்விடுகிறோம். நமக்கு நாமே வளையங்களைப் போட்டுக் கொள்கிறோம். குடும்பம், ஊர், சாதி என்ற வரையறைக்கு அப்பால் தமிழுக்கும் தமிழ்நாட்டுக்கும் சிறிது உழைத்தால் நம்மை யாரும் வெல்ல முடியாது. தற்சார்பு மேலோங்கும்.

     இறைக்கொள்கை, சமயம், சாதி இவற்றையெல்லாம் தனிப்பட்டச் செய்திக்குள் போட்டு அடக்கிக்கொண்டு தமிழால் வெளிப்படுவோம். தமிழ் ஒன்றே பாதுகாப்பும் படிக்கல்லுமாம்.

     தமிழ்ப் பணி என்பது எளிதான பணியுமன்று. தமிழை, இன்றைய பின்தோன்றி முன்னேறிய மொழிகளுக்கு இணையாகக் கொண்டு போவது என்பது எளிய பணியுமன்று. முயல் தூங்கி ஆமைவெல்லும் கதைதான் இப்போது நடைபெற்றுக் கொண்டுள்ளது.

     தமிழால் ஒன்று படுவோம். தமிழொன்றே அனைத்தும். ஒன்று படல் ஒன்றே குறிக்கோள்!


தென்மொழி

பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்கள் தொடங்கிய தனித்தமிழ் இலக்கியத் திங்களிதழ். 50ஆம் ஆண்டில் நடைபோட்டு அரசியல், அறிவியல், வரலாறு, பண்பாட்டுக் கட்டுரைகள், பாடல்களுடன் வெளிவந்து கொண்டுள்ளது!

தனியிதழ் உரு 10.00
ஆண்டுக் கட்டணம் உரு. 120.00

இதழ்களை அஞ்சலில் பெற
தொடர்பு கொள்வீர்!
தென்மொழி
1, செந்தமிழ் அடுக்ககம், (GK Flats), மேடவாக்கம், சென்னை - 600 100.
பேசிகள்: 044-22771231, 9444440449

இணையதள உருவாக்கம் மற்றும் பராமரிப்பு : கௌதம் இணைய சேவைகள்